மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மாநிலம் சஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கானா சென்றிருந்தார். அப்போது அவர், சஹீராபாத், கம்மாரெட்டி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சோதனை நடத்தி, ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்த மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசின் மானியம் குறித்து கேள்வி எழுப்பினார். இது அப்போது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி சஹீராபாத் பகுதியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவரின் காரை டி.ஆர்.எஸ் கட்சியினர் வழிமறித்தனர். இதுவும் அப்போது தெலுங்கானா மாநில பாஜக அரசியலை பரபரப்பாக்கியது.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியினர் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை போஸ்டராக ஒட்டினர். மேலும், அந்த போஸ்டர்களில் ‘மோடி ஜி ரூ. 1105’ என்று அச்சடித்து சிலிண்டர்களை விநியோகம் செய்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக சார்பாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கலந்துகொண்டு பேசினார்.
ஹைதராபாத் பகுதியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மேடையில் அவர் முன்னிலை வகிக்க பாஜகவினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மேடை மீது வந்த டி.ஆர்.எஸ் நிர்வாகி ஆனந்த் கிஷோர் கேள்விகளை எழுப்ப முனைந்தார். மைக்கை தன் பக்கம் திருப்பி பேச முற்படுகையில் மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகள் அவரை பேச விடாமல் மேடையை விட்டு கீழே இழுத்துச்சென்றனர்.
பொதுக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, "பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவது தான் நோக்கம் என சந்திரசேகர் கூறுகிறார். ஆனால் நாங்கள் வாரிசு இல்லாத அரசியலை பேசுகின்றோம். அரசு மக்களுக்காக, நாட்டுக்காக இருக்க வேண்டும். குடும்பத்திற்காக இருக்க கூடாது" என கூறினார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தியபோது, டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், “யார் ஏற்றினார்களோ அவர்கள் தான் குறைக்க வேண்டும்” என்றதுடன் மிகக் கடுமையான சொற்களைக் கொண்டு மத்திய அரசை சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.