பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ் குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த சூழலில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகத்தான் தேஜஸ்வி பங்கேற்கவில்லை; விரைவில் நிதிஷ்குமார் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று கூறப்பட்டது. தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, யார் வரவில்லையோ அவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். இதுவும் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் மகா கூட்டணியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா, “மகா கூட்டணியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற வதந்தி ஊடகத்தின் மூலம் பரப்பப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் உறுதியாக தொடர்ந்து வருகின்றனர். அதேசமயம் தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.