
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.அதன்படி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில், 'மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.