உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சரை ஸ்மிருதி இராணி தனது சொந்த தொகுதியான அமேதியில் வீடுக்கட்டி குடியேற போவதாக அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் நேற்று முதல் முறையாக, அமேதிக்கு பயணம் மேற்கொண்ட ஸ்மிருதி இராணி பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பிறகு அமேதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இராணி அமேதியிலேயே தான் சொந்தமாக வீடு கட்டி குடியேற உள்ளதாகவும், அமேதி தொகுதி மக்கள் தங்கள் பிரதிநிதியைக் காண டெல்லி வரை செல்ல வேண்டியதில்லை எனவும் கூறினார். மேலும் பொதுமக்களுக்காக தனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனக் கூறிய அமைச்சர் ஸ்மிருதி, தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் நேரடியாக சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமேதி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் குடும்ப தொகுதியாக கருதப்பட்ட நிலையில், முதன் முறையாக பாஜக கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்த தொகுதியை தொடர்ந்து பாஜகவின் கோட்டையாக மாற்ற அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சருமான ஸ்மிருதி இராணி நடவடிக்கை எடுத்து வருகிறார்.