இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனா வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்துள்ளது மேலும் சர்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சீனாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, “லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் சொல்வது பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு ராகுல் காந்தி லாடக் பயணம் மேற்கொண்ட போது, “வியூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பாங்காக் ஏரி பகுதிக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டுள்ளது என்பது தெளிவானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் ஒரு அங்குலம் இடம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று டெல்லியில் பேசிய அவர், “சீனா வெளியிட்ட வரைபடத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது என்பதை ராகுல் காந்தியால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். ஒரு வேளை நம் நிலத்தை சீன ஆக்கிரமித்தது என்றால் அது, நேருவின் காலத்தில் நடந்தது. ராகுலுக்கு வரலாறு தெரியவில்லை. அவருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
ராகுல் சீன வரைபடத்தை நம்புகிறார். ஆனால் எங்கள் வெளியுறவு அமைச்சரகம் அல்லது பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுவதை நம்பவில்லை. நேரு - காந்தி குடும்பம் எப்போதுமே சீனாவையே அதிகம் நம்புகிறது. இந்தியா, உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம், பாதுகாப்பு துறை அல்லது இந்தியாவின் வேறு எந்த அமைப்பு மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது அவர்களின் பிரச்சனை. அவர்கள் சீனா அல்லது பாகிஸ்தானை மட்டுமே நம்புகிறார்கள். அது அவர்களின் பிரச்சனை, அதற்கு நாங்கள் என்ன பதில் சொல்வது?” எனக் கேட்டுள்ளார்.