Skip to main content

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து; 4 பேர் உயிரிழப்பு 

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

A bus fell into a 100-foot ravine in Andhra pradesh

 

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், படேரு பகுதியில் மோதலம்மா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த கோவிலுக்குச் செல்ல மலைப் பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்காக மாநில அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மோதலம்மா கோவிலுக்குச் செல்ல சோடாவரத்தில் இருந்து படேரு நோக்கி நேற்று (20-08-23) அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

 

சமீபத்தில் பெய்த கன மழையால் சற்று கீழ் நோக்கிச் சாய்ந்திருந்த மரக்கிளைகள் மீது படாமல் இருக்க பேருந்தை, ஓட்டுநர் சற்று இடது புறமாகத் திருப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 100 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பள்ளத்தாக்கில் மரக்கிளைகள் சிக்கி பேருந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனடியாக, அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை விசாகப்பட்டினம், படோரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மலைப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்