இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாக சாடியது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த மருத்துவமனையின் உரிமையாளர் பேசும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. அதில் அவர், ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக, ஆக்சிஜன் இல்லாவிட்டால் யார் இறப்பார்கள், யார் பிழைப்பார்கள் என சோதனையை செய்ததாக கூறியுள்ளார்.
மருத்துவமனை உரிமையாளர் அந்த வீடியோவில், "கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. நோயாளிகளை அழைத்துச் செல்ல நாங்கள் மக்களைக் கேட்டுக்கொண்டோம். ஆனால் யாரும் அழைத்துச் செல்ல தயாராக இல்லை. எனவே நான் ஒரு சோதனை செய்ய முடிவெடுத்தேன். ஆக்சிஜன் இல்லாவிட்டால் யார் இறப்பார்கள், யார் பிழைப்பார்கள் என கண்டறிய, ஏப்ரல் 26 அன்று காலை 7 மணிக்கு ஐந்து நிமிடங்கள் ஆக்சிஜன் விநியோகத்தைத் துண்டித்தோம். இதுபற்றி யாருக்கும் தெரியாது. இருபத்தி இரண்டு நோயாளிகள் மூச்சுத் திணறத் தொடங்கினர். அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம். ஐ.சி.யூ வார்டில் பிழைத்த 70 பேரிடமும் தங்களது சொந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வருமாறு கூறப்பட்டது" என கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ குறித்த தனியார் ஊடகத்திடம் பேசிய மருத்துவனை உரிமையாளர், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என மறுக்கவில்லை. நான் பேசியது தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து, சிக்கலான நிலையில் உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாங்கள் ஒரு போலி சோதனையை மேற்கொண்டோம். நான்கு கரோனா நோயாளிகள் ஏப்ரல் 26 அன்று இறந்தனர், மூன்று பேர் ஏப்ரல் 27 அன்று இறந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மொத்தம் 22 பேர் இறந்துவிட்டார்களா என்று கேட்கப்பட்டதற்கு அதுதொடர்பாக சரியான எண்ணிக்கை இல்லை என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள மாவட்ட மாஜிஸ்ட்ரேட், வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார். அதேபோல் ஆக்ராவின் தலைமை மருத்துவ அதிகாரி, அந்தக் காலகட்டத்தில் அந்த மருத்துவமனையில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், சுகாதாரத்துறை இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கூறியுள்ளார்.