இடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அந்த தீவிரவாதி என்றும் பேசினார்.
அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த கருத்துக்கு பல எதிர்கருத்துகளும், ஆதரவுகளும் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து இந்திய பிரதமர் மோடி தனது கருத்தினை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்கவே முடியாது. இந்து மதத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதியாக இருந்தால் அவர் உண்மையான இந்துவாகவே இருக்க முடியாது. அனைவரையும் அன்புடன் ஆரத்தழுவும் தத்துவத்தை கொண்டது இந்து மதம், அப்படிப்பட்ட இந்து மதம் பிற உயிர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ அனுமதிக்காது" என தெரிவித்துள்ளார்.