சாராய வியாபாரிகள் போட்டு வைத்திருந்த சாராய ஊறலைக் கண்ட யானைக்கூட்டம் ஒன்று சாராயத்தைக் குடித்துவிட்டு கூட்டமாக போதையில் படுத்திருந்த சம்பவம் ஒடிஷாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரிக்காட்டு பகுதியில், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், ஊறலைத் தேடிச் சென்ற மக்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் பானையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறலை யானைக்கூட்டம் ஒன்று குடித்தது தெரியவந்தது. மேலும் சுமார் 24 யானைகள் ஊறல் பானைகளுக்கு அருகிலேயே போதையில் படுத்து கிடந்தன. பின்னர் எதுவும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் மக்கள் சென்றனர்.
ஏற்கனவே, மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசக்கூடாது. அவை விலங்குகளின் கால்களைச் சேதப்படுத்தும். குறிப்பாக யானையின் கால்களை பாட்டில் சில்லுகள் காயப்படுத்தும் என்பது போன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறலை அருந்தி காட்டு யானைகள் போதையில் கிடந்த இந்த சம்பவத்திற்கு சம்பந்தட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.