
மத்திய அரசின் புதிய திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில், பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதால், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து இனி அகற்றப்படும்.
யுத்தம், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், அத்தகைய விவசாய உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தக சட்டப்பிரிவு 2020’ க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளும், வர்த்தகர்களும் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் சுதந்திரமான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.
‘விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020’ க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பெரிய சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றவர்களுடன் விவசாயிகள் இணைந்து வர்த்தகம் செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.