கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க கால தாமதம் செய்து வருகிறார். இந்த கால தாமதத்தை சரியான முறையில் பயன்படுத்தி வரும் காங்கிரஸ் மற்றும் முதல்வர் குமாரசாமி, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
இதற்கிடையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.டி.பி. நாகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். அவருடன் சித்தராமையா 4 மணி நேரம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அது போல, நேற்று முன்தினம் இரவு சித்தராமையா வீட்டில் வைத்து எம்.டி.பி. நாகராஜுடன் முதலமைச்சர் குமாரசாமியும் ஆலோசித்தார். மேலும் எம்.டி.பி. நாகராஜ் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக குமாரசாமியும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் முதலமைச்சர் குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் நிருபர்களிடம் பேசிய எம்.டி.பி.நாகராஜ், தன்னுடைய ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என்றும், அதிருப்தி எம்.எல்.ஏ.வான சுதாகரையும் சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று காலையில் எம்.டி.பி.நாகராஜ் தனது முடிவில் இருந்து திடீரென்று பின் வாங்கினார். மும்பையில் பேசிய, அவர் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளதாக தெரிவித்ததால், கர்நாடக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அதில் பாஜக கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் கோரவுள்ளதால், முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.