அம்பேத்கரின் பெயரில் புதிய மாற்றம் செய்திருப்பது தேவையில்லாத சர்ச்சைக்கு வழிவகுக்கும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி. தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் முழுப்பெயரான பீம்ராவ் அம்பேத்கரின் நடுவில், அவரது அப்பாவின் பெயரான ராம்ஜியை சேர்க்க உபி மாநில ஆளுநர் ராம் நாயக் பரிந்துரைத்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தையும் அவர் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில அரசு நேற்று அரசுத்துறைகளுக்கும், லக்னோ மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வுகளில் இடம்பெற்றுள்ள ஆவணங்களிலும், பதிவுகளில் அம்பேத்கரின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல், அம்பேத்கர் (Ambedkar) என்ற ஆங்கில உச்சரிப்பில் இருப்பதுபோல் அல்லாமல், இந்தியில் (Aambedkar) என்றே உச்சரிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. எம்.பி. உதித் ராஜ், ‘அம்பேத்கரின் பெயரை மாற்றவேண்டிய காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒருவரை எப்படி அழைக்கவேண்டும் என்பது அவரவர் தனிப்படி சுதந்திரம். இதில் திடீர் மாற்றங்களைக் கொண்டுவந்து தேவையில்லாத சர்ச்சைகளை எதற்காக ஏற்படுத்தவேண்டும்?’ என தெரிவித்துள்ளார்.