அண்டைநாடான இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்க நகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ஒரு பிரெட் பாக்கெட் 200 ரூபாய் என ஆடம்பர பொருள் முதல் அத்தியாவசிய பொருள்வரை பெரும் விலையேற்றத்தை சந்தித்த இலங்கை மக்கள் ஒரு கட்டத்தில் டீசல் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற தொடர் பாதிப்புகளால் பொங்கியெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில மாநில அரசுகள் கொடுக்கும் இலவச திட்டங்களால் இந்தியாவும் இலங்கை போன்ற பொருளாதார பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரதமர் மோடியிடம் அரசு அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு பணிகளிலிருந்து விடுபட்டு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது சில மாநிலங்கள் கொடுக்கும் இலவசத் திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும், இதுபோன்ற இலவச திட்டங்களால் இலங்கை தற்பொழுது சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவும் எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பாக பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்ததக்கவை அல்ல எனவும் அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 4 மணி நேரம் பிரதமருடன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.