திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்துநிற்க மறுத்த மூன்று இளைஞர்கள் கைது!
திரையரங்கில் தேசியகீதம் பாடும் பொழுது எழுந்துநிற்காத மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் மற்றும் அப்போது அனைவரும் எழுந்துநிற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்நிலையில் ஐதராபாத் அருகில் உள்ள உப்பரபள்ளி பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அல் ஹபீப் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர்கள்.
இவர்கள் திரையரங்கிற்குள் தேசியகீதம் இசைக்கப்படும் பொழுது எழுந்து நிற்காததால் பலரும் கண்டித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். காவல்துறை விசாரணையில், அந்த இளைஞர்கள் உள்ளே நுழையும் போது, திரையரங்கம் இருட்டாக இருந்ததால், சிரமப்பட்டு எங்கள் இருக்கையை அடைந்தோம். அதற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விட்டது. அதனால் எழுந்துநிற்க தாமதம் ஆனது. சிறிதுநேரத்தில் எழுந்து நின்றுவிட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இதை மறுத்துள்ள திரையரங்க உரிமையாளர், இந்த இளைஞர்களை எழுந்து நிற்கச் சொன்னவர், இவர்களுக்குப் பின்னால் இருந்த காவல்துறை உயர் அதிகாரிதான். அவர் கூறிய பின்புதான் இவர்கள் எழுந்து நின்றிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞர்களின் மீது தேசிய மரியாதை சட்டம், 1971 பிரிவு 2-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- ச.ப.மதிவாணன்