சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் நாடகப்பிரியா குழுவின் 50ஆம் ஆண்டு விழா, நாடகப்பிரியா நிறுவனத் தலைவர் எஸ்.வி. வெங்கட்ராமனின் நூற்றாண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000வது நாடக விழா இன்று (20.01.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நாடகப்பிரியா நாடகக் குழுவின் தலைவர் எஸ்.வி. சேகரின் நாடகங்களை கண்டு ரசித்தார். மேலும் எஸ்.வி. சேகருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கட்சிகள் மாறும்போது, கொடிகளின் நிறம் மாறலாம். ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக்கூடாது. அதற்கு உதாரணமாக எஸ்.வி.சேகரை தைரியமாக சொல்ல முடியும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் அவர் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு. இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த நாடகத்தில் சில காட்சிகளை பார்த்தோம். இதையெல்லாம் பார்க்கின்றபோது, 2026ஆன் ஆண்டு தேர்தலுக்கு இவரை பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறும் ஒன்றும் தேவையில்லை.
கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி எஸ்.வி.சேகரின் 3500வது நாடக விழா நடந்தபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அதில் கலந்துகொண்டார். அதில் எஸ்.வி. சேகர் போட்ட நாடகத்தின் தலைப்பு என்னவென்றால், ‘தத்துப்பிள்ளை’. அதில் கலந்து கொண்ட கலைஞர் வாழ்த்துகின்றபோது சொன்னார். சேகர் ஒரு தத்துவப் பிள்ளை என்று வாழ்த்தினார்” எனப் பேசினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, எஸ்.வி. சேகரின் குடும்பத்தினர், நாடகப்பிரியா நாடகக் குழுவினர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.