
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் நீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோச்ஜ், காவல் அதிகாரி அபிஜித் மோண்டல் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி தான் என கடந்த 18ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தண்டனை இன்று (20-1-25) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.