அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிபர் பதவியேற்பு விழா இன்று (20.01.2025) இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நடைபெற்றது. 2வது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், மார்க் ஜூகர் பெர்க் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
அதே சமயம் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேப்பிடல் கட்டடத்தின் திறந்தவெளி பகுதியில் அதிபர் பதவியேற்பு விழா நடைபெறுவது வழக்கம்.
இருப்பினும் வாஷிங்டன் டிசியில் கடும் குளிர் நிலவுவதால் திறந்து வெளிக்குப் பதில் உள் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பதவியேற்பு விழாவைக் காண இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழாவில், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து தற்போது வெளியேறியுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, கிளின்டன், இத்தாலி அதிபர் மேலோனி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.