அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிபர் பதவியேற்பு விழா இன்று (20.01.2025) இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நடைபெற்றது. அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே சமயம் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். 2வது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்னெப்போதையும் விட, வலிமையாக இருக்கும். பரபரப்பான வெற்றியின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன். டிரம்ப் நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் மிகவும் எளிமையாக அமெரிக்காவை முதன்மைப்படுத்துவேன். நமது இறையாண்மை மீட்கப்படும். பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்.
நீதியின் அளவுகோல்கள் மறுசீரமைக்கப்படும். நீதித்துறை மற்றும் நமது அரசாங்கத்தின் தீய, வன்முறை மற்றும் நியாயமற்ற ஆயுதமயமாக்கல் முடிவுக்கு வரும். பெருமைமிக்க, வளமான, சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணத்தில் இருந்து, அமெரிக்காவின் சரிவு முடிந்துவிட்டது. என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றனர். உண்மையில் என் உயிரைப் பறிக்க முயன்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு அழகான பென்சில்வேனியா மைதானத்தில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதைக் கிழித்தது. ஆனால் எதோ ஒரு காரணத்திற்காக என் உயிர் காப்பாற்றப்பட்டது என்று நான் அப்போது உணர்ந்தேன். இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன். அமெரிக்காவை மீண்டும் நன்முறையில் மாற்ற நான் கடவுளால் காப்பாற்றப்பட்டேன் என நினைக்கிறேன்” எனப் பேசினார்.