புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மரில் அலுவலக ரீதியான பயன்பாட்டுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக, புதிய சுற்றறிக்கையை ஜிப்மரின் இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், ஜிப்மரின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இனி வரும் காலங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, அறிவிப்பைத் திரும்பப் பெறக்கோரி புதுச்சேரி தி.மு.க. சார்பில் ஜிப்மர் மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அம்மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்தி அலுவல் மொழி சர்ச்சை பற்றி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் முதல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எந்த இடத்திலும் இந்தி திணிப்பு இல்லை. சர்வீஸ் புக்கிற்காக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையை இந்தி திணிப்பு என தவறாகப் பேசுகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் தமிழுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும்" எனத் தெரிவித்தார்.