Skip to main content

தேர்தல் பத்திரத் திட்டம்; ‘ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருக்கிறது’ - உச்சநீதிமன்றம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Supreme Court says Governing party is in favor at Electoral Bond Scheme

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது. 

 

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி இது குறித்து கடந்த 29 ஆம் தேதி இது தொடர்பான எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். அப்போது அதில், “கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தாமல் அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொதுவான உரிமை இருக்க முடியாது. கட்சி பெறும் நிதி விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள உரிமை இல்லை. எல்லாத் தரவுகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் அடங்காது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இது தொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் முதல் நாளான நேற்று முன்தினம் (31-10-23) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கபில் சிபில் ஆகியோர் தங்களது வாதத்தை முன்வைத்தனர். அதில் அவர்கள், “தேர்தல் தொடர்பான சட்டம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. மேலும், இது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்ற விபரத்தை அறிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இதுபோன்ற நன்கொடை ஊழலை தான் ஊக்குவிக்கிறது”  எனத் தெரிவித்தனர். 

 

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு நேற்று (01-11-23) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியம் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. முழுமையான ரகசியம் கடைப்பிடிக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியத்தை கடைப்பிடிப்பது தான் இந்த திட்டத்தில் உள்ள பிரச்சனை. தேர்தல் நிதி பத்திரங்கள் பற்றிய தகவலை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரத்தை எதிர்க்கட்சிகள் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரத்தை விசாரணை அமைப்புகள் மூலம் ஆளுங்கட்சி தெரிந்து கொள்ளலாம். இதுதான் இந்த திட்டத்தில் பிரச்சனை” என்று கூறினார்கள். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றும் (02-11-23) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்