ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.