இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் குறித்த அச்சமும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தற்போதுவரை 269 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் அச்சம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களிலும், நகரங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நடைபெறும் அனைத்து விதமான கூட்டங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 30ஆம் தேதி முதல் 2ஆம் தேதிவரை பெரிய கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப்கள் மற்றும் பப்களைப் பொறுத்தவரை, டிஜே இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அபார்ட்மெண்ட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் டிஜே இசைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேவாலயங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 300 ஐ தொட இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.