Skip to main content

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
 The Supreme Court questions on NEET question paper leak issue

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (08-07-24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டதாவது, ‘மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாள் முன்பாக ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாதபடி நீட் தேர்வுல் இந்த முறை அதிகம் பேர் முழு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். நீட் வினாத்தாள் செல்போனில் கசிந்துள்ளன; பிரிண்டர்களில் அவை எடுத்து தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 The Supreme Court questions on NEET question paper leak issue

இதனையடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் எத்தனை பேர் தவறான வினாத்தாள் தரப்பட்ட மையங்களில் தேர்வெழுதினர்?’ எனத் தேசிய தேர்வு முகமைக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘1,563 மாணவர்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களில் 6 பேர் தான் கருணை மதிப்பெண் பெற்றனர். ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ’ எனப் பதிலளித்தனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா என நீதிபதி கேட்ட கேள்விக்கு தேசிய தேர்வு மையம் இவ்வாறு பதிலளித்துள்ளது. 

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது, “நீட் வினாத்தாள் கசிந்தது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது. வினாத்தாள் காட்டுத்தீ போல் பரவி இருக்கும். 20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100%  மதிப்பெண்கள் பெற்ற விவகாரமும் சந்தேகம் வருகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது? நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது? எப்போது அச்சிடப்படுகிறது? மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. இது தொடர்பான முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து இந்த வழக்கை வருகிற 11ஆம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்