லாக்டவுன் காரணமாகச் சமைப்பதற்கு அரிசி கிடைக்காததால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,800 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக ஏழை மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சமைப்பதற்கு அரிசி கிடைக்காததால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மலைக்கிராமத்தில் வசிக்கும் மூவர், 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்றை வேட்டையாடி அதனைத் தோள்மீது போட்டுக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் பேசும் ஒருவர், "உணவு இல்லாததால், காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்து வந்தோம்" எனக் கூறுகிறார். இந்திய சட்டப்படி ராஜநாகம் என்பது பாதுகாக்கப்பட்ட ஊர்வன வகை விலங்கினமாகும். இதனை வேட்டையாடினால் ஜாமீன் இல்லாத சிறைத்தண்டனை கிடைக்கும். இந்தச் சூழலில், உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட அந்த மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.