Skip to main content

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வது குறித்து உச்சநீதிமன்றம் அரசுக்கு அறிவுரை...

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

supreme court about liquor home delivery

 

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒருசில இடங்களில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தமிழகம், கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளைத் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் கடத்த இரு நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்துப் பிடித்துக்கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன. 


இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை நேரடியாகக் கடைகள் மூலம் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வீடியோ கான்பரன்சிங் விசாரித்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறியதுடன், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதுபானங்களை வழங்கும் திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். சொமேட்டோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான திட்டங்கள் வகுத்துவருவதாகச் செய்திகள் வெளியான நிலையில் உச்சநீதிமன்றமும் தற்போது இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. மதுபானங்களை வீட்டிற்கே சென்று ஹோம் டெலிவரி செய்ய சத்தீஸ்கர் அரசு ஏற்கனவே முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்