மும்பையில் இன்று (22/05/2020) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்குச் சுருங்கப்படும். ரெப்போ ரேட் என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4.40%லிருந்து 4.0 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் விலை உயர்ந்துள்ளது; ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு. அடுத்த சில மாதங்களில் பருப்புகள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கலாம். வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. கரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதமாக குறைந்துள்ளது. பொருளாதாரச் சூழ்நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சனைகளைச் சரி செய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தக் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை கடன் தவணைகளைச் செலுத்த கால அவகாசம். இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளது." இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.