எதுக்கு வீடியோ எடுக்குறீங்க.. நான் யாருனு தெரியுமா? எனப் பொதுமக்களிடம் போதையில் காவலர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் அருகே உள்ளது ஜகதீஷ்பூர் கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் நவ்நீத் ஸ்ரீவஸ்தவா நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் ஈத் கி மண்டி எனும் மெயின் ரோடு பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்துள்ளார்.
காவல்துறை சீருடையில் இருந்த நவ்நீத் ஸ்ரீவஸ்தவா, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாகத் திட்டுவது, கையைக் காட்டி மிரட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த சில இளைஞர்கள், மதுபோதையில் சுற்றித்திரியும் காவலரை அவர்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைப் பார்த்த காவலர் அந்த இளைஞர்களைச் சிறிது தூரம் துரத்திச் சென்றிருக்கிறார்.
அப்போது, போதை அதிகமானதால் ஒரு பெட்டிக்கடை வாசலிலேயே கீழே விழுந்தார் காவலர். அந்த கடையின் உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் துரத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஜகதீஷ்பூர் போலீசார், நவ்நீத் ஸ்ரீவஸ்தவாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இணையவாசிகள் மது போதையில் தகராறு செய்த காவலருக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.