அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.