திருநங்கைகளுக்கு என தனியாக ஒரு பல்கலைக்கழகம் உருவாகிறது. உத்தரப்பிரதேசத்தில் இப்பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது.
திருநங்கைகள் கல்வியறிவில் மேம்படவும், அவர்கள் தயக்கமின்றி, எந்தவித கேலி, கிண்டல்களுக்கு ஆளாகாமல் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின் பசில்நகரில் தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு திருநங்கைகள் 1ம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிக்கலாம். இது தவிர அவர்கள் ஆராய்ச்சி படிப்பும் படிக்கலாம்.
இதுகுறித்து திருநங்கைகள் வளர்ச்சிக்கான அறக்கட்டளை தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா, ‘’ திருநங்கைகள் கல்வி பயில்வதற்கு வசதியாக பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது. இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி இந்த பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் முதலாம் வகுப்பு கல்வி கற்க அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் மார்ச் மாதம் பிறவகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் திருநங்கைகள் ஒன்று முதல் பிஎச்டி வரை படிக்கலாம்’’என்று தெரிவித்துள்ளார்.