பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

இதனையடுத்து நாடு முழுவதும் பல இடங்களில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான எந்தவித திட்டங்களும் இடம்பெறவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், "கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக இந்த நாட்டில் வசித்து வரும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.