கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹாபிஸ். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று முன் தினம் (06-11-23) தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக இது குறித்து ஆலுவா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தையான முகமது ஹாபிஸிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த மாணவி படிக்கும் அதே பள்ளியில் வேற்று மதத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் முகமது ஹாபிஸுக்கு தெரிய வர தனது மகளை கண்டித்துள்ளார். இருப்பினும், அந்த மாணவி தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மகளுடைய புத்தகப் பையில் ஒரு செல்போன் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். மேலும், தனது மகள் அந்த செல்போனில் இருந்து தனது காதலனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முகமது ஹாபிஸ், இரும்பு கம்பியை கொண்டு தனது மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அவர் பலவந்தமாக தனது மகளின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி குடிக்க வைத்துள்ளார். அதைக் குடித்த மாணவி சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதை தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஹாபிஸை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று (07-11-23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, முகமது ஹாபிஸ் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஆணவக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.