கேரளா, வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் அந்த தொகுதி நாடு முழுவதும் பேசப்படுகிறது. அதேபோல் வயநாடை கேரளா முழுவதும் பேசப்படும் அளவுக்கு பழங்குடிப் பெண் ஸ்ரீதன்யா பெருமை படுத்தியிருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வயநாடு தொழுவண்ணா பகுதியை சோ்ந்த ஏழை பழங்குடி தம்பதிகளான சுரேஷ்- கமலத்தின் இளைய மகள் ஸ்ரீதன்யா. இவர் படிப்பில் படு சுட்டியானவர். ஓரு முறை அந்த ஊருக்கு வந்த வயநாடு பெண் கலெக்டரின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதைகள் ஸ்ரீதன்யாவையும் ஈர்த்து கொண்டதால் அவருக்கும் கலெக்டர் ஆக வேண்டுமென்ற எண்ணம் உருவானது.
அதன்படி படிப்பில் மீண்டும் அதிக கவனத்தை செலுத்தி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் முதன்மையாக வந்தார். ஓலை வீட்டில் வசித்து வரும் கூலி தொழிலாளிகளான அவரின் பெற்றோர்கள் மகள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கு போதுமான பணத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல்போக, அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் உதவியுடன் டெல்லி சென்று தோ்வு எழுதிவிட்டு மீண்டும் வயநாட்டில் பெற்றோருடன் அந்த கடனை அடைக்க கூலி வேலைக்கு சென்றார் ஸ்ரீதன்யா. அப்போது மின்சாரம் தாக்கியதில் ஸ்ரீதன்யாவின் இடது கையில் காயம் ஏற்பட்டது.
தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று 410-வது இடத்தை பிடித்துள்ளார் ஸ்ரீதன்யா. இதனால் வயநாடு மற்றும பழங்குடியினர் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளாவின் முதல் பழங்குடிப் பெண் ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.