பஞ்சாப் மாநிலம், பதிண்டா எனும் பகுதில் இந்திய இராணுவ முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் இன்று அதிகாலை சாதாரண உடையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு இராணுவ வீரர்கள் பலியாகினர்.
இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு நடைபெற்று நான்கு வீரர்கள் பலியானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே இராணுவ முகாம் பகுதியை இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து இராணுவமும் பஞ்சாப் போலீஸும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் போலீஸ் தரப்பில், ‘பதிண்டாவில் உள்ள ராணுவ முகாம் வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன. சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்கள் கொண்ட இன்சாஸ் துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத செயல்பாடுகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை’ எனச் சொல்லப்படுகிறது.