உலகிலேயே இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கரோனா, அதிக ஆபத்தானதான ஒரு வகையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை கரோனாவே காரணமாக அமைந்தது. மற்ற வகை கரோனாக்களை விட டெல்டா வகை கரோனா, 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், டெல்டா வகை கரோனா மீண்டும் மரபணு மாற்றமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கரோனாவிற்கு டெல்டா ப்ளஸ் (டெல்டா +) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 6 பேர் டெல்டா + கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 14 பேருக்கும், ஜப்பானில் 13 பேருக்கும், போர்ச்சுகலில் 12 பேருக்கும், போலந்தில் 9 பேருக்கும், சுவிட்சர்லாந்தில் 4 பேருக்கும் நேபாளத்தில் இருவருக்கும் டெல்டா+ கரோனா உறுதியாகியுள்ளது. கனடா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கும் டெல்டா+ பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த புதிய உருமாற்றத்தின் பண்புகள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.