புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திலும், மேற்கு மாநில அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகரும் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்து, ஏட்டிக்கு போட்டியாக பேட்டியளித்தனர்.
புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க மேற்கு மாநில கட்சி அலுவலகத்தில் மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கட்சி பணிகள் செய்வதற்காக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் கட்சியின் தலைமையிடம் பெற்றுள்ளார்.
மேலும் கட்சிக்கு விரோதமாக அன்பழகன் செயல்படுகிறார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிவு வந்த போது ஜானகி அணிக்கு சென்றவர் அன்பழகன். 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவின் தலைமையை ஏற்றார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் துவங்கிய போது அன்பழகன் பல கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் பெற்று சசிகலா பக்கம் சென்றார். கட்சி ஒருங்கிணைந்த போது கையூட்டு பெற்று கொண்டு தான் அபிடவிட் அளித்தார். பல லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு தான் தற்போது பொதுக்குழுவில் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழன் கலந்து கொண்டார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் இணைந்து பேசி ஒற்றை தலைமை யார் என அறிவித்தால் நல்லது. கட்டாயப்படுத்தி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது. மேலும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய நான்கு பேரும் தொண்டர்களை சந்தித்து வரும் நிலையில் கட்சி யாரிடம் செல்கிறதோ அவருக்கு புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கும்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாநில செயளாலர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.கவை பொறுத்தவரை அ.தி.மு.கவிற்கு ஒற்றைத் தலைமை என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பதில் நிர்வாகிகள் உறுதியாக உள்ளோம். கட்சி நடத்த நான் காசு வாங்குவதாக ஓம்சக்தி சேகர் கூறுவது ஒட்டுமொத்தமாக அ.தி.மு.கவினரை அவமதிக்கும் செயல். அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்துகிறார்.
ஓ.பி.எஸ்சின் பினாமியாக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளார். அவர் ரூ.30 கோடி மதிப்பில் அரியூரில் இடம் வாங்கியுள்ளார். ஓ.பி.எஸ் தமிழகத்தில் அடித்த பணத்தை ஓம்சக்தி சேகர் மூலம் புதுச்சேரியில் நில வணிகத்தில் முதலீட்டு செய்துள்ளார். இது குறித்து அமலாக்க துறையிடம் புகார் செய்ய உள்ளேன்" என பதிலடி கொடுத்தார்.
புதுச்சேரி அ.தி.மு.கவின் இரு மாநில செயலாளர்களும் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருவரை ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக கடும் விமர்சனம் செய்து வருவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.