கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தடைகளை மீறி போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "இந்திய அரசியல் சாசனத்தின் நன்மதிப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து தற்போது மக்கள் ஜனநாயக முறைப்படி போராடும் உரிமையைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எடியூரப்பா இப்படி மோடி சொற்படி ஆடுவார் என நான் நினைக்கவில்லை. எடியூரப்பா முற்போக்கானவர் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்றே நான் கருதியிருந்தேன்" என தெரிவித்துள்ளார்.