காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான சசி தரூரின் முன்னாள் உதவியாளர், தங்கம் கடத்தியாக போலீசாரால் நேற்று (29-05-24) கைது செய்யப்பட்டார்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் சுமார் 500 கிராம் தங்கத்தை, சசி தரூரின் முன்னாள் உதவியாளர் சிவக்குமார் பிரசாத்திடம், ஒப்படைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, சிவக்குமார் பிரசாத் மற்றும் துபாய் பயணி ஆகிய இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் பிரச்சாரத்திற்காக தர்மசாலாவில் இருந்தபோது, விமான நிலைய வசதி உதவியின் அடிப்படையில் எனக்கு பகுதி நேர சேவையை வழங்கி வரும் எனது ஊழியர்களின் முன்னாள் உறுப்பினர் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எந்தவொரு குற்றச் செயலையும் நான் மன்னிக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். சட்டம் அதன் நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.