தீபாவளிப் பண்டிகை அடுத்த வாரம் வரவிருப்பதையடுத்து, பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு டெல்லி மக்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் தீபாவளியில் பட்டாசுகள் கொளுத்துவதைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியை டெல்லி மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லிவாசிகளுக்காக கடந்த ஆண்டு கனாட் பிளேஸில் நடைபெற்ற ஒளிநிகழ்ச்சி பெற்ற வெற்றியை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த ஆண்டு தீபாவளிக்கு நாங்கள் வெவ்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
நவம்பர் 14 அன்று இரவு 07:39 மணி முதல் டெல்லியின் 2 கோடி மக்கள் ஒன்றாக லட்சுமி பூஜை செய்யத் தொடங்க வேண்டும். நான், எனது அமைச்சர்களுடன் லட்சுமி பூஜையைத் தொடங்குவேன். அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அந்நேரத்தில் டெல்லி மக்கள் அனைவரும் உங்கள் தொலைக்காட்சிகளை இயக்கி, உங்கள் குடும்பத்தினருடன் லட்சுமி பூஜையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் " எனக் கூறினார்.