ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தறு பட்ட நிலையில் ரத்த வெள்ளத்திலும், மனைவி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது குளமாவு என்ற பகுதி. அங்கே உள்ள கருப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 68 வயதான இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவியின் பெயர் மினி. 60 வயதான மினிக்கும் சுகுமாரனுக்கும் குழந்தைகள் கிடையாது. கலந்து சில வருடங்களுக்கு முன்பு சுகமாரன் அல்ஷிமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் படுத்த படுக்கையானார்.
இந்நிலையில், நேற்று சுகுமாரனுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வழக்கமாக வரும் செவிலியர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் சுகுமாரன் கழுத்தறு பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர் குளமாவு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்தான விசாரணையில் ஈடுபட்டனர். வீட்டை சோதனையிட்டதில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் சுகுமாரனின் மனைவி மினி தூக்கில் சடலமாக தொங்கிய வண்ணம் இருந்துள்ளார்.
உடனடியாக மினியின் சடலத்தை மீட்டு தொடுபுழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மயங்கிய நிலையில் கிடந்த சுகுமாரனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த வழக்கில் படுக்கையில் இருந்த கணவனை மனைவியே கொலை செய்ய திட்டமிட்டு, கணவனின் கழுத்தை அறுத்த பின் தூக்கிட்டுக் கொண்டாரா? அல்லது மர்ம நபர்களால் இந்த கொடூர செயல் நடத்தப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.