ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக மாருதி சுசூகி நிர்வாகம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை பணியை விட்டு நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு, தேக்க நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார் கவா தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வாகனத் தயாரிப்பு விதிகள் மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து தேக்க நிலையும் ஆட்டோமொபைல் துறையை மிகமோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என தெரிவித்தார்.
விற்பனை குறைந்ததால் பல கார் தயாரிப்பு நிறுவனங்களும், தங்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளித்துள்ளன. இந்த நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்களுக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் தற்போது வேலையிழந்துள்ளனர்.
கடந்த 9 மாதங்களாக ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்தநிலையால் 300 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் விநியோக பிரிவில் பணியாற்றிய 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.