Skip to main content

எல்லை பிரச்சனைக்கு இந்தியாவை குற்றஞ்சாட்டிய சீனா - வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

india china

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகச் சீனா கூறியது.

 

இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த தீர்மானங்கள் படிப்படியாக அமலுக்குவருகின்றன. அதேபோல் இருநாடுகளுக்குமிடையே தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

 

இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம், சீன வீரர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர், இந்தியா சட்டவிரோதாமாக உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி சீனாவின் பகுதிக்குள் நுழைந்ததாகவும், இந்தியா - சீனாவுடனான எல்லை பிரச்சனைக்கு இதுவே காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், சீனாவின் இந்தக் கருத்துக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் "எந்த அடிப்படையும் இல்லாத இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நமது நிலையை தெளிவுபடுத்திவிட்டோம்" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து அவர், "சீனத் தரப்பிலிருந்து அதிக எண்ணிக்கையிலான படைகளைக் குவித்தது, அவர்களின் ஆத்திரமூட்டும் நடத்தை மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி சூழ்நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயன்றது ஆகியவையே கிழக்கு லடாக்கில் அமைதி மற்றும் இடையூறு விளைவித்தன" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர், "எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான படைகளையும் ஆயுதங்களையும் குவித்துவருகிறது. சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவே நமது இராணுவம் படைகளை எல்லையில் படைகளைக் குவித்துவருகிறது" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்