Skip to main content

கேள்வி கேட்ட செய்தியாளர்; ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர்!

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

meenakshi lekhi run viral video wrestlers video congress shared twitter 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

 

ஓரிரு தினங்கள் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. டெல்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடையே முன்பை விட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து  மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள். மேலும், டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

 

இந்நிலையில் இந்த அறிவிப்பின்படி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் ஒன்றாகக் கூடினர். மேலும் மனதில் வலிகளைச் சுமந்து கொண்டு இந்தியாவிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஆயத்தமாகி வந்தனர். 'எங்களுக்கு எதற்காக இந்த பதக்கங்கள்; இவற்றை நாங்கள் கங்கை தண்ணீரில் விட்டு விடுகிறோம். தேசத்திற்காக பதக்கங்களை சேர்த்து புகழ் சேர்த்ததைவிட வேறென்ன செய்தோம்' என கண்ணீர் வடித்தபடி இருந்த வீரர்களை சக வீராங்கனைகள், வீரர்கள் தோளைத் தட்டித் தேற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசத் தயாராக இருந்த நிலையில் நரேஷ் திகாயத் வாங்கிக் கொண்டார். அப்போது அங்கு கூடி இருந்த விவசாயிகள் மற்றும் பலர் மல்யுத்த வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்தனர்.

 

meenakshi lekhi run viral video wrestlers video congress shared twitter 

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக சென்றது குறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அமைச்சர் மீனாட்சி லேகியிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவன பெண் செய்தியாளர் ஒருவர், ‘மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு, "சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூறினார். அதனைத் தொடர்ந்து  மத்திய அமைச்சர் அங்கிருந்து அவரது காரை நோக்கி ஓட்டம் பிடித்தார். செய்தியாளர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மத்திய இணை அமைச்சர் அவரிடம் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்