உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.