பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (03-01-24) ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார்,
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர், மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டேவிட் வார்னர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் இதுவரை 6,932 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்களை குவித்திருந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில்,தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.
மேலும், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.