புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் 600 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் மற்றும் 32 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர். இதில் மொத்த விற்பனையாளரான தென்றல் நகரைச் சேர்ந்த மணி என்பவரை விசாரணை செய்ததில் அவர் சென்னையைச் சேர்ந்த ஷாஜகானிடம் இருந்து போதை வஸ்துக்கள் வாங்கி வந்தது தெரிய வந்தது.
அதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த ஷாஜகானை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காவல்துறையிடம் ரகசியத் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில், பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்குக் கொண்டு வரப்படவுள்ள போதை வஸ்துக்கள் சென்னை வந்துள்ளதாகவும், தனது மைத்துனர் மதுராந்தகம் ரவி புதுச்சேரி எடுத்து வர உள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ரவியை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி சென்னை திருமுடி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உட்பட நான்கு வாகனங்களைச் சோதனை செய்ததில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட 4 வாகனங்கள் உட்பட 8 டன் போதை வஸ்துக்கள், 2 லட்சம் ரூபாய் பணம், 8 செல்போஃன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதனை வைத்திருந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் மதுராந்தகம் ரவி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்து பெங்களூரில் அவர்களுக்கு யார் இதனைக் கொடுத்து அனுப்பினார்கள் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.