மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.
கடந்த நவம்பர் மாதம் 28- ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். நேற்று (05.01.2020) மகாராஷ்டிர மாநில அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பவாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் பவாரை 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து வேட்பாளராக அறிவிக்க பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.