கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகளை இன்றளவும் அப்பகுதிகளில் காண முடிகிறது. அப்படிப்பட்ட நிலையில் புயல் நிவாரணமாக தமிழக மாநில அரசு 15,000 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை 1500 கோடி ரூபாயை மட்டும் இரண்டு கட்டங்களாக அளித்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட நிவாரண தொகையை வழங்குமாறு மாநில அரசும், மக்களும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கான அடுத்த கட்ட நிவாரன தொகை அறிவிக்கப்படும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் புதுச்சேரி, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 7,214 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரிக்கு 13.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி நிவாரணமாக கர்நாடகத்துக்கு ரூ. 949.47 கோடி, ஆந்திராவுக்கு ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அதிகபட்சமாக 4714 கோடி ரூபாய் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.