Skip to main content

‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் நகைக்கடைக்காரரிடம் 50 லட்சம் மோசடி செய்த கும்பல்...

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

pune man got cheated by friend using sand

 

‘சதுரங்க வேட்டை’ படப் பாணியில் நகைக்கடைக்காரர் ஒருவரை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். 

 

புனேவின் ஹடாஸ்பூரில் நகைக்கடை நடத்திவரும் நபர் ஒருவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். நகை வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த அவர், காலப்போக்கில் அந்த நகைக்கடைக்காரரிடம் நட்பு பாராட்டி அவருக்கு நெருக்கமானவராக மாறியுள்ளார். அந்த நபர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் நன்றாகப் பழகியதோடு, அவர்கள் வீட்டிற்குப் பால் விநியோகம் செய்வதையும் வாடிக்கையாகச் செய்துவந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் தனது நண்பர்கள் இருவரோடு அந்த நகைக்கடைக்காரரைப் பார்க்கவந்த அந்த நபர், மேற்குவங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அரியவகை மணல் தங்களிடம் இருப்பதாகவும், அதனைச் சூடேற்றினால் அது தங்கமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

மேலும், மணலை எவ்வாறு தங்கமாக மாற்ற வேண்டும் எனவும் நகைக்கடைக்காரருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இவர்களின் பேச்சால் கவரப்பட்ட நகைக்கடைக்காரர், அந்த நபரிடம் ரூ .30 லட்சம் ரொக்கமும், சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் கொடுத்து அந்த மணலை வாங்கியுள்ளார். கடைசியில் அந்த மணலை சூடேற்றியபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நகைக்கடைக்காரர், உடனடியாக இது தொடர்பாக ஹடாஸ்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மணலை விற்ற நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி ஹால்மார்க் முத்திரை; தங்க நகைகள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Counterfeit Hallmark Stamp Gold jewelry confiscated

நகைக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போலி ஹால்மார்க் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையில் போலி ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நகைக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் போலி ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

இந்த சோதனையின் மூலம் நகைக்கடையில் இருந்து 16 வளையல்கள், 25 செயின்கள், 4 ஜோடி காதணிகள் மற்றும் 217 மோதிரங்கள் உள்ளிட்ட போலி ஹால்மார்க் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த எடை 1.173 கிலோ எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹோட்டல் அறையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை சுட்டுக் கொன்ற காதலன்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Boyfriend incident girlfriend in Pune

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி. 26 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த 27 ஆம் தேதி இரவு வந்தனா தன்னுடைய காதலனுடன் சேர்ந்து ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறை எண் 306ல் தங்கியுள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை அந்த அறையில் தனியாக இருந்த வந்தனா சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உடனடியாக ஹோட்டலுக்கு வந்த போலீசார், அறையில் இருந்த வந்தனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார், இளம்பெண் வந்தனா திவேதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வந்தனாவுடன் வந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பதற்றத்துடன் ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும், அந்த இளைஞரின் பெயர் ரிஷப் நிகாம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை பகுதியில் தலைமறைவாக இருந்த ரிஷப் நிகாமை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. அதில், போலீசால் கைது செய்யப்பட்ட ரிஷப் நிகாமும் ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்ட வந்தனாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனிடையே, லக்னோவில் இருந்த வந்தனாவுக்கு புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை கிடைத்ததால் அவர் அங்கிருந்து புனேவிற்கு வந்துவிட்டார். ஆனால், அதில் ரிஷப் நிகாமிற்கு பிடிக்கவில்லை. தன் காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என்று ரிஷப் நிகாம்மிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில் காலப்போக்கில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், வந்தனா தன்னை விட்டுட்டு வேறு நபரை காதலிக்கலாம் என ரிஷப் நினைத்துக்கொண்டிருந்தார். ரிஷப்பிற்கு வந்தனா மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் நீட்சியாக, ரிஷப்பை குறிப்பிட்ட சில நபர்கள் சமீபத்தில் 2 முறை தாக்கியுள்ளனர். மேலும், வந்தனா தான் இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரிஷப்பிற்கு தன் காதலி வந்தனா மீது இருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது.

இத்தகைய சூழலில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  ரிஷப், தன் காதலி வந்தனாவை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்தனாவை கொலை செய்யும் முடிவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், ஹிஞ்சேவாடி பகுதியில் மராத்தா சமூக இட ஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது. மேலும், அந்த பகுதி முழுக்க அதிகளவில்  பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தது.

அப்போது, சுதாரித்துக்கொண்ட ரிஷப், அவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து வந்தனாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில், அந்த பெண்ணின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து வந்தனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அதே வேளையில், பட்டாசு சத்தம் காரணமாகத் துப்பாக்கியால் சுட்ட சத்தம் வெளியே கேட்காமல் இருந்தது" விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, கொலையாளி ரிஷப்பிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பெண் ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.