இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15-18 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்தச்சூழலில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த அனுமதி வழங்குமாறு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டதும், ஏற்கனவே இத்தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்துவது குறித்த சோதனைக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.