ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற குதிரை பேரம் நடப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்த சூழலில், ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை, யாரும் எதிர்பாராத விதமாகக் கட்சியிலிருந்தும் துணை முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கியது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி மூன்று முறை கடிதம் கொடுத்த நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இந்தச் சூழலில், ஆகஸ்ட் 14 அன்று சட்டசபையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையே ராஜஸ்தானில் குதிரை வர்த்தக பேரங்கள் அதிகரித்துள்ளதாகவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர்களின் விலை 10 கோடியாக இருந்து, பின்னர் 15 கோடிக்கு மாறி தற்போது அது வரம்பற்றதாகிவிட்டது என்றும் அசோக் கெலாட் தரப்பு குற்றம்சாட்டியது. இந்நிலையில், குதிரைபேரத்தைத் தடுக்கும் வகையில், ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்காக ஜெய்சால்மரில் சொகுசு விடுதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விமானம் மூலம் அவர்கள் அனைவரும் அங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.